ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்துக்கு அரசு செலவில் ஆடம்பர வரவேற்பா?
தமிழக முதல்வர் உடனே தலையிட்டு மதுரை உதவி ஆணையரின் அறிவிப்பைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக
மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் பயணமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 22/07/2021 அன்று விமானம் மூலமாக மதுரை வருகிறார். மதுரை சத்யசாய்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் வருகையை முன்னிட்டு மதுரை விமானம் நிலையம் முதல் மாநகர் முழுவதிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அவர் தங்கும் விடுதிகளிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் விமான நிலையத்திலிருந்து அவர் கலந்து கொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளைப் பராமரிக்கவும், அவரின் வருகையின் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சியின் உதவி ஆணையாளர் (பணியமைப்பு) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு உயர் பதவியில் உள்ள குடியரசுத் தலைவர் , பிரதமர், ஆளுநர், மாநில முதல்வர்களுக்குச் செய்யப்படுகின்ற முன்னேற்பாடுகளைப் போல எந்த அரசுப் பதவியிலும் இல்லாத அமைப்புத் தலைவருக்கு, அதுவும் இந்து மதவெறியைத் தூண்டி மதக்கலவரங்களை உருவாக்கும் ஒருவருக்கு மாநகராட்சி செலவில் ஏற்பாடுகளைச் செய்வது விதிகளை மீறிய செயலாகும்.
தமிழக முதல்வர் உடனே தலையிட்டு உதவி ஆணையாளர் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
9597092640
21.07.2021