நேபாள பிரதமர் சர்மா ஒலி ” ராமனை தாங்கள் இவ்வளவு நாளாக  இந்தியராக எண்ணி வந்தோம்  சீதையை மட்டும்  நேபாளி என்று நினைத்திருந்தோம் ஆனால் தற்போதுதான் ராமனும் நேபாளி என்று தெரியவந்துள்ளது” என்று  பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

இது இராமன் பிறந்த இடப்பிரச்சனையல்ல , நேபாளத்தின் எல்லைப் பிரச்சினை.

 நேபாள பிரதமர் இப்படிப் பேசுவதற்கு இந்திய அரசு கடந்த காலங்களில் நேபாள அரசின் மீது கொடுத்துவந்த அழுத்தம் / உள்நாட்டு அரசியல் நெருக்கடி  இவையே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது பண்பாட்டுச் சிக்கல் அன்று, புவிசார் சிக்கல். எல்லா நாடுகளுடனும் எல்லை பிரச்சனையை, மதப் பிரச்சினையை மோடி அரசு உருவாக்கி வருகிறது.  தற்போது நேபாளத்துடன் கூர்மையடைந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக வரையறுக்கப்பட்டு, இந்தியாவின் புதிய வரைபடம் ஒன்றை கடந்த 2019 , அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த வரைபடத்தில், உத்தராகண்ட் மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள காலாபானி மற்றும் லிபூ பகுதிகள் இந்தியாவுக்குள் அடங்கியதாக அமைந்துள்ளது.

1816ல் கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தம் மற்றும் அதற்கு பிறகு கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களிலும் மகாகாளியின் கிழக்கு பகுதி நேபாளத்தின் கீழ் வருகிறது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது.

“காலாபானி பகுதி எங்கள் பிரதேசத்திற்குள் வரும் என்பதில் நேபாள அரசு மிகத் தெளிவாக இருக்கிறது, காலாபானி ஒரு சர்ச்சைக்குரிய பகுதி. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் அதனைத் தீர்க்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தால், அதனை நேபாளம் ஏற்றுக் கொள்ளாது. வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இதனைத் தீர்க்க நேபாளம் தீர்மானித்துள்ளது,” என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் , கடந்த வாரம் நேபாள அரசு அவர்கள் நாட்டு அதிகாரபூர்வ வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியா இணைத்து வெளியிட்ட லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்த மூன்று இடங்களும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளன என இந்தியாவும், நேபாளத்தின் மேற்கு மாகாணத்தில் உள்ளன என நேபாளமும் கூறி வருகின்றன.

இந்திய – நேபாள எல்லையை ஒட்டுமொத்தமாக வரையறுக்க இரு நாடுகளும், 1981ல் ஒருங்கிணைந்த ஒரு செயற்குழுவை உருவாக்கின. அந்தக் குழு, 2007ல் காலாபானி மற்றும் சிஸ்தா என்ற இரு எல்லைப் பகுதிகளை வரையறை செய்யாமல் விட்டுவிட்டது.

நிலைமை இப்படி இருக்க  காலாபானி என்று அழைக்கப்படும் லிபுலேக் – காலாபானி – லிம்பியதாரா பகுதிகளை  இந்தியா தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை நேபாளம் எதிர்க்கிறது.

நேபாளத்தின் புது அரசமைப்புச் சட்டம்

நேபாள அரசியலமைப்புச் சட்டத்தில் நேபாளத்தை இந்து நாடு என்பதற்குப் பதிலாக நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என பெயரிடப்பட்டு, சமயச் சார்பற்ற நாடாக 2015இல் அறிவிக்கப்பட்டது. தனது ஒரே இந்து நாடு என்று காப்பாற்றத் துடித்த சங்பரிவார் கும்பலுக்கும் இந்திய அரசுக்கும் இது பேரிடியாக இருந்தது. அப்போதே நேபாள எல்லையில் வாழ்ந்த மதராசிகளைக் கொண்டு உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டியது. நேபாளத்தில் தன்னுடைய மேலாதிக்க நோக்கங்களை மேலும் முன்னெடுத்துக் கொண்டு செல்ல / நேபாளத்தைப் பணிய வைக்க 2015ல் 1800 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய நேபாள எல்லையில் உள்ள முக்கிய வர்த்தக தொடர்பு புள்ளிகளை / சாலைகளை மூடியது இந்தியா.

இந்தியாவுடனான 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வணிகம் நடைபெறும் இந்த எல்லை மூடப்பட்டதால், எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு, நேபாள மக்களுக்கு கடுமையான வேதனைகளை ஏற்படுத்தியது.

இந்த முற்றுகையின் காரணமாக முக்கிய சமூக சேவைகள் முடங்கின , மருத்துவ மனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளும், பொருட்களும் தீர்ந்துவிட்டன,  16 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டதாக செய்திக் குறிப்புகள் கூறின. பொருளாதாரமானது சீரழிக்கப்பட்டுவிட்டது, தொழிற் சாலைகளை மூட வேண்டியதாகிவிட்டது. சுற்றுலாவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேபாளம் எங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அந்த சமயத்தில் ஒலி தலைமையிலான ஆளும் கட்சி இந்தியாவுக்கு முன் பணிவாக செல்ல விரும்பவில்லை. அதற்கு பதில் அனைத்து பொருட்களுக்காகவும் சீனாவை நாடுவது நல்லது என நினைத்தது.

சமையல் எரிவாயு இல்லாமல் நேபாளத்தில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அப்போது நேபாளம் சீனாவுடன் வணிக ஒப்பந்தம் செய்து தங்களது உறவை வளர்த்துக் கொண்டனர். இப்படி நேபாளத்தை இந்தியாவின் நட்பு நாடு பட்டியலிலிருந்து சீனாவின் பக்கம் தள்ளி விட்டது இந்தியாவின் தலையீடு தான். அது இந்தியா – சீனா மோதலுக்குப் பிறகு தற்போது பெரிதாகியுள்ளது.

சீனாவின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத் வழியாக கைலாஷ் – மானசரோவா் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தியாவிலிருந்து புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்காக தாா்ச்சுலாவிலிருந்து லிப்போலெக் கணவாய் வரை சாலை இந்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கிறது.

தாா்ச்சுலா – லிப்போலெக் நெடுஞ்சாலை, கைலாஷ் – மானசரோவா் புனித யாத்திரைப் பயணிகளுக்காக மட்டுமல்லாமல், இந்திய எல்லைக்கு ராணுவத் தளவாடங்களை விரைந்து கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டது . இது தற்போது நேபாளத்துக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

உடனே , தாா்ச்சுலா – லிப்போலெக் சாலைக்கு நேபாளம் கண்டனம் தெரிவித்தது. அதற்கு நேபாளத்தின் கண்டனம் சீனாவின் தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று மறைமுகமாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே குறிப்பிட்டது, நேபாளத்துக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேபாளத்தின் எல்லைகளை இராணுவத்தின் மூலமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மோடி அரசு திட்டமிடுகிறது. இது ஆர்.எஸ்.எஸ் இன் அகண்ட பாரதக் கனவின் வெளிப்பாடு தான்.

அக்டோபர் 2000 இல்  75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாராட்டும்வகையில், விவேக் என்ற மராத்திய வாரப்பத்திரிக்கை அம்ரித்பாத் என்ற துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கிரேட்டர் இந்தியா என்ற வரைபடம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வரைபடத்தில் நேபாள நாடும் இந்தியாவின் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு அப்போதே நேபாள அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

நேபாளத்திலுள்ள இந்து பரிஷத், நேபாள் இந்து சங்காதன், பஷுபதி சிக்சியா பிரச்சார்சமிதி மற்றும் சேவாதம் ஆகிய அமைப்புகளின் துணையோடு நேபாளத்தில் உள்நாட்டுக் கலவரங்களைத் தூண்டி நேபாளத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்தியா துடிக்கிறது.  இதன் விளைவாகத்தான் இந்தியாவை சீண்டும் வகையில் எந்த ராமன் பிறந்த இடத்தை வைத்துக் கொண்டு மோடி அரசு இந்தியாவில் மத அரசியல் செய்கிறதோ அந்த அரசியல் மீது நேபாளப் பிரதமர் கை வைத்துள்ளார்.

நாய் கடித்தால் தொப்புளில் ஊசி போடலாம். தொப்புளில் கடித்து விட்டால் என்ன செய்வது ? அதைத்தான் நேபாளப் பிரதமர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *