கடவுள் அரசியல் – 2
===================================
உங்கள் முருகன் வேறு
எங்கள் முருகன் வேறு
===================================
தமிழர்கள் வரலாற்றில் முருகன் வழிபாட்டை இரண்டு தளங்களில் புரிந்து கொள்ள வேண்டும் ஒன்று தமிழர் மரபுக்கு உட்பட்ட முருகன் வழிபாடு மற்றொன்று வேத மரபுக்கு உட்பட்ட ஸ்கந்தன் வழிபாடு.
நமது முருகன் சங்க இலக்கியங்களில் குறிஞ்சிநில தலைவனாக, வள்ளியின் நாயகனாக , வேடனாக , கடம்பனாக , வேடனாக, சேயோனாக இருந்தவன்.
வேத மரபு முருகன், ஸ்கந்தனாக , கார்த்திகேயனாக , சுப்பிரமணியனாக, தேவ சேனாதிபதியாக , விசாகனாக , சுரேசனாக ,சிவனின் மகனாக, விநாயகனின் அண்ணனாக, தெய்வானையின் நாயகனாக இருப்பவன் .
குறிஞ்சித் திணையில் இயற்கை வழிபாடாக இருந்த முருக வழிபாடு பிற்கால சங்க காலத்தில் திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளும் கொண்ட ஒரு வழிபாடாக மாறுகிறது பரிபாடலில் அவனது பிறப்பு வைதீக மரபின் முழுமையுடன் கட்டமைக்கப்படுகிறது. அது அப்படியே ஆரிய மயமாக்கப்பட்டது .
பண்டை மாந்தரில், குறிஞ்சி நில மக்கள், தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினார்கள். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்காகும்.
வேட்டைத் தொழிலில்; அவர்கள் மறம் சிறந்திருந்ததனால், தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் – இளைஞன் என்றார்கள். குமரன் என்ற பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.
குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்குப் பெயர்கள் தோன்றின.
முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில்; நிறுத்தியதால் அவனுக்குக் கந்தன் என்ற பெயரும் தோன்றியது. கந்து என்றால் தூண். கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.
” கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் ” என்ற புறநானூற்றின் 52 ஆவது பாடல் மூலம் ஓர் உதாரணத்தை, கந்தம் என்ற சொல்லிற்குக் காட்டலாம். ( தமிழர் மதம் – பாவாணர் )
சங்க இலக்கியங்களில் முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி. இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைந்துள்ளன. முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:
(1) குறுந்தொகை
சேவலங் கொடியோன் (கடவுள் வாழ்த்து), சேய் (பாடல் -1), முதிர்கடவுள்(87), நெடுவேள்(111), தெய்வம் (263), முருகு (362).
(2) நற்றிணை
முருகு(47,82,225), நெடுவேள்(173), கடவுள்(251), தெய்வம்(351), அணங்கு(376).
(3) ஐங்குறுநூறு
அணங்கு (28), சேய் (242), கடவுள் (243, 257), முருகு (245,247,249,308), மலைவான் (248), மலைஉறை கடவுள் (259), விறல்வேள் (250).
அணங்கு – முருகவேள் என்று உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(4) அகநானூறு
முருகன் (1,59,98), கடவுள்(13,156), நெடுவேள்(22,98,120,232,382), முருகு (11,28,118,158,181,232,288), நெடியோன்(149).
(5) கலித்தொகை
தெய்வம் (39), சேய் (39,104) கடவுள் (93).
(6) பரிபாடல்
சேய் (5, 21) , செவ்வேள் (5), முருகு (5,8), முருகன் (21), கடம்பமர் செல்வன் (8), குன்றமர்ந்தாண்டான் (17), செல்வன் (18, 21), மாஅல் மருகன் (19), நெடுவேள் (21).
(7) பதிற்றுப்பத்து
முருகு (26).
(8) புறநானூறு
சேய் (14,120,125), முருகன் (16,23,299), நெடுவேள் (55), முருகு (56,259), கடவுள் (158).
குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை முருகன் ஊர்தியாகக் கொண்டமையால் மயிலூர்தி,மயிலேறும் பெருமாள் என்ற பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் முருகனைப்
பற்றிப் பலபாடல்கள் இடம் பெற்றுள்ளன.
“கழல்தொடி சேஎய் குன்றம்”
“சினமிகு முருகன் தன் பரங்குன்றத்து”
“முருகன் ஆரணங் சென்றலின்””
“முருகனன்ன சீற்றத்து”
“முருகென மொழியும் வேலன்”‘
“வள்ளியங் காணக் கிழவோன்
ஆண்டகை விறல் வேள்
“கார் நறுங் கடம்பின் பாசிலை தெரியல்
தர் தலை முருகன் சுற்றத்தன்ன நின்’
“நெடுவே ணிலைய இய காமர் வியன்றுறைக்”
“மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண் செய்யோனும்’
“முருகொத் தீயே முன்னியது முடித்தலின்’
“மருதம் ரம்போகி நெய்தல்அம் மூலன்
கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலை தலாத்தை பனிமுல்லை பேயனே
அமைழ தைங்குறு நூறு” என்கிறது ஐங்குறுநூறு
சங்க இலக்கியங்களில் மேற்குறித்த பாடலடிகள் இடம் பெற்றுள்ளதைக்
கொண்டு பழத்தமிழ் மக்கள் முருகக் கடவுளை முழு முதல்வனாகக்
கருதி வழிபட்டமை புலப்படும்.
தமிழரின் சங்ககால வழிபாட்டு மரபில் வேலே தெய்வம் எனப் போற்றப்பட்டது. இத்தகைய வேல் வழிபாடும் மர வழிபாடும் உருவ வழிபாட்டிற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முந்தையது என மானுடவியலாளரை மேற்கோள் காட்டி விளக்கும் தமிழறிஞர் நா. வானமாமலை இவ் வழிபாடு எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கும் என்பதனையும் எடுத்துரைக்கின்றார்.
” பண்டைக்காலத் தமிழர் கருத்தில் இத்தெய்வம் எத்தன்மைகள் அல்லது தனிமங்கள் ( Elements ) கொண்ட தாக இருந்தது ? இத்தெய்வத்திற்குச் சில தன்மைகள் , குணங்கள் , விருப்புகள் உண்டென பண்டைத் தமிழர் கருதினர் . அவை வருமாறு : ( 1 ) முருகு – மென்மை , நன்மணம் , அழகு . நன்மை , முருகுஏறி வெறியாடல் . ( இது செயல் ) ( 2 ) முருகன் – இளமை , தெய்வம் , தெய்வமேறி ஆடும் வேலன் , குறிஞ்சி , பாலைநிலத் தலைவன் . ( 3 ) வேலன் – வேலைப் பிரயோகிக்கத் தெரிந்த வீரன் , ஸ்கந்தன் , கந்தனைப் பூசிக்கும் வேலன் . முதல் நிலையில் இத்தெய்வக் கருத்து குறிஞ்சி நில வாழ்க்கையில் தோன்றியிருத்தல் வேண்டும் . கல் கருவி நாகரிகம் மறைந்து உலோக நாகரிகம் தோன்றி இரண்டும் கலவையாக நிலைபெற்றிருந்த காலத்தில் உலோகக் கருவி களுக்கும் , அக்கருவியைப் பயன்படுத்துவோருக்கும் ஏற்பட்ட மதிப்பினால் , வேலைப் பயன்படுத்தும் ஒரு தெய்வம் பண்டைத் தமிழர் சிந்தனையில் மதிப்புப் பெற்றது . அக்காலத்தில் வேலைத் தாங்கிய பெண் தெய்வங்கள் இருந்ததில்லை . பிற்காலத்திலேயே திரிசூலம் பெண் தெய்வங்களின் ஆயுதமாகக் கருதப்பட்டது ” என்று குறிப்பிடுகிறார் .
“காக்க காக்க கந்தவேல் காக்க ” என்று முருக பக்தர்கள் இன்றும் குரலெழுப்புவதை நாம் பார்க்கலாம்.
(தொடர்வோம்.)
நன்றி