கட்சி உறுப்பினர்களை உசுப்பேற்ற இட்டுக்கட்டி எழுதாதீர்கள் தோழர் பெ.ம

(இறுதிப் பகுதி )

…………………………………………………….

// பெரியாரியத் திராவிடவாதிகள் – இதில் அண்ணாவின்  பங்களிப்பை,

தி.மு.க.வின்போராட்டங்களைக் கூடக் கணக்கில்  எடுப்பதில்லை. பிறகு எங்கே , காங்கிரசுக்காரரான எஸ்.முத்தையா அவர்கள் பங்களிப்பை, காங்கிரசுத் தலைவர்

 காமராசர்பங்களிப்பை கவனிக்கப்

 போகிறார்கள்! //

// பெரியார் புராணம் எழுதுவோர்  தி.மு.க., காங்கிரசு, முத்தையா முதலியார்,அண்ணா,  காமராசர் உள்ளிட்ட பலரின் பங்களிப்பை மறைப்பதைத் தவறு என்போம்.// 

    -தோழர்.பெ.ம

மனுதர்ம ஆட்சி செய்து பார்ப்பனர்களின் அடிமையாக தமிழர்களை வைத்திருந்த இராஜராஜ சோழன் புராணம் பாடுவதை விட பார்ப்பனர் எதிர்ப்பு பேசி தமிழர்களின் சுயமரியாதை காத்த பெரியார் புராணம் பாடுவது தவறு இல்லை என்றே கருதுகிறேன். சரி விசயத்திற்கு வருகிறேன்.

பெரியாரியவாதிகள்  இடஒதுக்கீட்டு வரலாற்றை எழுதும் போது முத்தையா முதலியாரின் பங்களிப்பை மறைத்து விட்டதாக எழுதுகிறீர்களே எந்த பெரியாரியவாதிகள் மறைத்தார்கள் என்று நேர்மையாகப் பதிவு செய்யுங்கள் தோழர் பெ.ம அவர்களே . நாங்கள் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

பெரியார் தொடங்கி அய்யா ஆனைமுத்து  உள்ளிட்டு எந்தப் பெரியாரியவாதிகளும் வரலாற்றை மறைக்க முயலவில்லை. மறைப்பதாகக் கூறி  நீங்கள் தான் பெரியாரியவாதிகளின் மீது வெறுப்பை வர வைக்க முயல்கிறீர்கள்.

” மந்திரி S.முத்தையா முதலியார் வாழ்க! வாழ்க! வாழ்க!

உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நமது மந்திரி

திரு. S. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத்தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபு வாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வரவேண்டியதான சட்டமாக்கி விட்டார்”

என்று தந்தை பெரியார் அவர்கள்  குடி அரசு இதழில் முத்தையா முதலியாரை வாழ்த்தி  தலையங்கமே தீட்டியுள்ளார். ( 11.11.1928) நிலமை இப்படியிருக்க யாருக்காக நீங்கள் இப்படி இட்டுக்கட்டி எழுதுகிறீர்கள்.

சட்டத்தின் முதல் திருத்தம் யாரால் வந்தது ?

சென்னை மாகாணத்தில் அப்போதிருந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் “தான் ஒரு பிராமணன் என்றே ஒரே காரணத்தினால்” மருத்துவம் படிக்க வழிவிடவில்லை என்றும் இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும் சென்னையைச் சேர்ந்த  செண்பகம் துரைராஜ் என்பவர் ஒரு வழக்குத் தொடர்ந்தார் அவரோடு ஸ்ரீனிவாசன் என்ற மாணவரும் தனக்கு போதிய மதிப்பெண் இருந்தும் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கில் இணைந்து கொண்டார். வழக்கை விசாரித்த “சென்னை உயர் நீதி மன்றம்” அதை ஏற்றுக் கொண்டு சென்னையில் அப்போது இருந்த அனைத்துவித இட ஒதுக்கீடுகளையும் இரத்து செய்து ஆணை பிறப்பித்தது !

வழக்கு மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் சென்ற போது, உச்ச நீதி மன்றமும்  இதை இந்திய அடிப்படை உரிமைக்கு (article 29 (1) & (2) ) எதிராய் இருப்பதாக எண்ணி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தி இட ஒதுக்கீட்டை இரத்து செய்தது

இதனால் வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது – என மத்திய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது

சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.09.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார். 

 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு’ ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

 நடுவணரசு அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என தமிழக மக்களுக்கு தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார்.

தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என வேலை வாய்ப்பில் மட்டுமின்றி கல்வியிலும் இட ஒதுக்கீடு கேட்டு  போராடினார்கள். அதற்கு முன்பாக கல்வியில் இடஒதுக்கீடு இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி

தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா , காமராசர் என அனைவரும் ஒத்த கருத்தில் இயங்கினார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டிருந்த மக்களின் கொந்தளிப்பை காங்கிரசுக் கட்சி தலைவர்கள் மூலம் குறிப்பாக காமராஜர் மூலம் அறிந்து கொண்ட நேரு தலைமையிலான இந்திய அரசு

கல்வியிலும் இட ஒதுக்கீடு கொண்டுவர முடிவு செய்தது. இப்படித்தான்

இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் (விதி (15) (4) வந்தது.

பெரியாரால் தான் முதல் திருத்தம் வந்தது என்று சொல்வதை பொறுக்க முடியாத தோழர் பெ.ம அதைச் சொல்ல முடியாமல்

// அரசமைப்புச் சட்டத்தின் முதல்

திருத்தம்இட ஒதுக்கீட்டிற்காக மட்டும் வந்ததா என்பதைப்பார்ப்போம் // என்று தலைப்பிட்டு

//அரசின் முன்னுரிமை வரிசைப்படி

நாலாவதுஇடத்தில் இட ஒதுக்கீட்டுத் திருத்தம் இருந்தது.ஆனால் அரசமைப்புச்

சட்ட உறுப்புகளின் வரிசையில்

பார்த்தால் இட ஒதுக்கீட்டுக்கான திருத்தம் உறுப்பு 15இல் வருகிறது//  என்று எழுதுகிறார்.

உண்மையில்  என்ன நடந்தது

மொத்தம் 14 திருத்தங்கள்

 அரசமைப்புச் சட்டத்தில் ஒரே ஒருமுன்மொழிவின் மூலம் – முதல் திருத்தம் (First Amendment of the Constitution )

 என்ற பெயரில் செய்யப்பட்டது.

அந்த முதல் திருத்தத்தை அன்றைய பிரதமர்  பண்டித நேரு  அவர்கள் 10.05.1951 அன்று

நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்.

இட ஒதுக்கீட்டுக்கான திருத்தத்தை நாடாளுமன்றமும் நேருவும்  முதல் திருத்தம் என்றே பதிவு செய்துள்ளார்கள்.

சட்டத் திருத்தம் ஏன் வருகிறது என நேரு அறிமுக உரையாற்றும் போது, ‘சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் (In Madras Provinance)’ இந்தச் சட்டத் திருத்தத்தைச் செய்ய வலியுறுத்தச் செய்கிறது எனக் கூறி பெரியாரின் போராட்டத்தைப் பதிவு செய்தார் ! ஆனால் தோழர்.பெ.ம வுக்குத்தான் மனம் வரவில்லை. ஏனெனில் பெரியாரை எதிர்த்தே கட்சி நடத்த வேண்டியிருப்பதால் தோழர்.பெ.ம  அப்படித் தான் எழுதுவார். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *