வரலாற்றில் முதலாளித்துவம் தேசியத்தில் இரண்டு போக்குகளைக் கொண்டிருக்கும் என்று புரட்சியாளர் லெனின் நமக்கு வரையறை வழங்கியுள்ளார்.

ஒன்று , முதலாளித்துவத்தின் தொடக்க காலம் தேசிய இயக்கத்தை வலுப்படுத்தும் ,தேச நலனை முன்னிறுத்தும,

இரண்டாவது , முதலாளித்துவத்தின் இறுதி காலம் அதாவது , ஏகாதிபத்திய காலம் தேச நலனுக்கு விரோதமாக இருக்கும் , தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு சர்வதேசத்தையே எல்லையாக கொண்டிருக்கும்.

தேச நலனை முன்னிறுத்தும் போதும் , தேச எல்லைகளை உடைக்கும் போதும் முதலாளித்துவம் தனது  “சந்தைக்காகவே “அதனை செய்யும் .

          தற்போதைய காலகட்டம் தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு முதலாளித்துவம் தனது சந்தை தேவைக்காக சர்வதேச அளவில் விரிவடைந்து கொண்டிருக்கிறது .இப்படியான நிலையில் பாட்டாளி வர்க்கத்திற்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது .

ஒன்று , முதலாளித்துவம் செல்லுகின்ற அதே பாதையில் சென்று அதாவது சர்வதேச அளவில் தனது சுரண்டலைத் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பது போல் , பாட்டாளி வர்க்கமும் சர்வதேசிய அளவில் ஒன்றிணைந்து போராடுவது .

           மற்றொன்று முதலாளித்துவம் செல்லுகின்ற பாதைக்கு நேர் எதிராகச் சென்று சர்வதேச வலைப் பின்னலை உடைப்பது . அதாவது எந்த தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு பரந்துபட்ட சுரண்டலை முதலாளித்துவம் நடத்திக் கொண்டிருக்கிறதோ அந்த தேச எல்லைக்குள் நின்று முதலாளித்துவத்தின் வலைப்பின்னலை அறுத்தெறிவது அதாவது பரந்துபட்ட அரச எல்லையிலிருந்து தேச விடுதலையை வென்றெடுப்பது .

வரலாறு நமக்கு அளித்த இந்த இரண்டு வாய்ப்புகளில் கட்டலோனியா இரண்டாவது வாய்ப்பை பற்றிக் கொண்டு நிற்கிறது .அது தான் அதன் பலம். அதே நேரத்தில் அதன் பலவீனம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒருங்கிணையாதது தான் .

          கட்டலோனியாவின் தேச விடுதலைக்கு முன் நிற்க கூடிய கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகள் தான் . அதன் பின் அணிவகுத்து நிற்பவர்களில் பெரும்பாலானோர்கள் நடுத்தர வர்க்கத்தினர் தான் .ஸ்பெயின் அரசாங்கத்தின் அரசு இயந்திரத்தை எதிர் கொள்கிற எந்த திட்டமும் இல்லாமல் தான் அவர்கள் வாக்கெடுப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள் . சட்ட ரீதியாக இந்தப் “பிரிவினை” சாத்தியமில்லை என்று தெரிந்து தான் இந்த வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்கள் .

        ஒருங்கிணைந்த சோவியத் ருசியாவில் (VSSR) எல்லா தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட்டிருந்த “சுய நிர்ணய உரிமை” அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்ததை போல் , ஸ்பெயின் அரசியல் சட்டத்தில் அப்படி வழங்கப்பட்டிருக்கவில்லை .

       கட்டலோனியாவுக்கு தனி கொடி , தனி முத்திரை , தனி நாடாளுமன்றம் வழங்கப்பட்டிருந்தலும் அங்கு அவர்கள் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி விட முடியாது .தமிழக சட்டமன்றம் எப்படி பெயரளவுக்கு இயங்குகிறதோ அதை விட சற்று கூடுதலாக அதிகாரங்களோடு இயங்குகிறதே தவிர தனித்த அதிகாரம் கொண்டிருக்கவில்லை .

எ.காட்டாக காசுமீர் சட்டமன்றத்தைச் சொல்லலாம் .காசுமீருக்கு தனி கொடி ,தனி முத்திரை ….., என 370 சட்ட பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படிருக்கிறதோ அப்படி ஒரு அந்தஸ்து தான் ” கட்டலோனியாவுக்கும் ” வழங்கப்பட்டிருக்கிறது .

         காசுமீரின் சட்டமன்றம் (உண்மையில் அது நாடாளுமன்றம் தான்) சட்டம் இயற்றிக் கொண்டாலும் மைய அரசின் (நாடாளுமன்றம் , குடியரசுத் தலைவர்) ஒப்புதலைப் பெற்ற பின்புதான் அந்த சட்டத்தை காசுமீரில் நடை முறைப்படுத்திக் கொள்ள முடியும் .அப்படி , கட்டலோனியாவும் தனது நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தை இயற்றிக் கொண்டாலும் மைய அரசின் (மாட்ரின்/ஸ்பெயின் அரசு ) ஒப்புதலோடு தான் நடைமுறைப்படுத்த முடியும் .

      இப்படியிருக்கையில் கட்டலோனிய நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள “சுதந்திர பிரகடணம் “சட்ட ரீதியாக செல்லாது .ஒரு தேச விடுதலையை “சட்ட ரீதியாக ” மட்டுமே எதிர்பார்க்க முடியாது , சட்ட ரீதியான “வாய்ப்புகளை ” மட்டுமே தேடிக் கொண்டிருக்க முடியாது தான் .

இந்த இடத்தில் தான் கட்டலோனியா அரசாங்கமும் சரி , கட்டலோனியாவை ஆண்டு கொண்டிருக்கிற கட்சியும் சரி , சட்டத்திற்கு பட்ட”தேச விடுதலையை ” மட்டுமே எதிர்பார்த்து காய் நகர்த்தி கொண்டிருந்தனர் .

அதை விட பொது வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதை விட கட்டலோனியாவிற்கு கூடுதல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர் .அதில் ஸ்பெயின் அரசாங்கம் மண்னை அள்ளிப் போட்டுவிட்டதால் ராஜதந்திர ரீதியாக கட்டலோனிய ” விடுதலையை “பிரகடணப்படுத்த வேண்டியதாயிற்று .

 எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமலே தான் இந்த விடுதலைப் பிரகடனம் நடந்து விட்டது. எல்லா வித முன் தயாரிப்புகளோடு அரசியல் திட்டத்தோடு ஆயுதப்படை கட்டி ஸ்பெயினிலிருந்து விடுதலை வேண்டி போராடிய “பாஸ்க் மக்களின் ” விடுதலைப் போராட்டத்தையே ஸ்பெயின் அரசாங்கம் முடக்கிப் போட்டுள்ளது.

மார்க்சியப் புரிதல் கொண்ட பாஸ்க் விடுதலை இயக்கம் ஸ்பெயினுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

 பாஸ்க் இன விடுதலை இயக்கம் சந்தித்த நெருக்கடிகளை கட்டலோனிய போராட்டக்காரர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் . பாக்ஸ் இன மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சில குறிப்பான விசயங்களை நாமும் தெரிந்து கொண்டு மீண்டும் கட்டலோனியாவுக்கு வருவோம் .

          க.இரா. தமிழரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *