1956ல் மொழிவாரி மாநிலங்கள் அறிவிக்கப்பட்டு, ஆந்திரா பிரிந்துசென்றுவிட்ட நிலையில் பெரியார், ம.பொ.சி உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டும் கோரிக்கை மிகத் தீவிரமடைந்தது.
இதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் எனும் பெயரை நீக்கி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஐயா சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அவர் தனது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார்.
காங்கிரசுக் கட்சி இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
முதலமைச்சர் காமராஜரோ “இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற சமாசாரம் இது.” என்றார்
1956 சூலை 27ஆம் நாள் சாகும் வரை உண்ணாநிலைப் போரைத் தொடங்கிய சங்கரலிங்கனார் 64-வது நாளின் போது கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ” ஜனசக்தி” துணையாசிரியர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களுக்கு வேதனையோடு முதல் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு ;
“காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது . காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை. காங்கிரஸ் – காந்தியத்திற்காக உழைத்தும் , அவர்கள் என் உண்ணாவிரதத்தில் கூட உதவி செய்யத் தவறிவிட்டார்கள். கம்யூனிஸ்டு கட்சி உதவி செய்கிறது . வெற்றி கிடைத்தால் வாழ்கிறேன் அல்லது சாகிறேன்.” என்று எழுதினார்.
அய்யா அவர்களின் உடல் நிலை மோசமடைந்தால் மதுரை அரசு இராசாசி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்த காரணத்தால், 62 வயது நிரம்பிய சங்கரலிங்கனாரின் உயிர் 13.10.1956 அன்று பிரிந்தது.
உயிர் பிரிந்த பிறகும் காங்கிரஸ் கட்சி இறங்கி வரவில்லை. சங்கரலிங்கனார் தத்தனேரி சுடுகாட்டில் எரியூட்டப் பட்ட போது அவரது கோரிக்கையையும் காங்கிரஸ் எரித்து விட்டது
திமுகவினால் உயிர் கொடுக்கப்பட்ட கோரிக்கை.
1957ல் தி.மு.க. முதன் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தபோதே, அதனுடைய முதல் தீர்மானம் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. 1957 மே 7ஆம் தேதியன்று தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 42 பேர் ஆதரவாகவும் 127 பேர் எதிராகவும் வாக்களிக்க, தீர்மானம் தோல்வியடைந்தது.
1961 ஜனவரியில் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி. சின்னத்துரை மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்தபோது, இது தொடர்பான விவாதத்தை முதலமைச்சர் பிப்ரவரி வரை ஒத்திவைத்தார். ஆனால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் புறக்கணித்ததையடுத்து முதலமைச்சர் காமராஜர், மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ்நாடு என நிர்வாகக் கடிதங்களில் குறிப்பிடுவதற்கு ஒப்புக்கொண்டது.
1964ல் தி.மு.க. உறுப்பினர் ராம. அரங்கண்ணல் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், அது தோற்கடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் காங்கிரஸ் அதைத் தோற்கடித்தது.
1967ல் தி.மு.க. பெற்ற வெற்றி எல்லாவற்றையும் மாற்றியது. முதலாவதாக, தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பெயர்ப் பலகை, 1967 ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழக அரசு என்று மாறியது.
அதற்குப் பின் 1967 ஜூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1969 ஜனவரி 14ல் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆக அதிகாரப்பூர்வமாக மாறியது.
திராவிடம் இல்லையேல் தமிழ்நாடு என்ற பெயர் கூட கிடைத்திருக்காது.
க.இரா. தமிழரசன்