திராவிடம் -பெரியார் -தமிழ்த் தேசியம் – 2
திராவிடம் குறித்து பெருஞ்சித்திரனார்
_______________________________________
“முதலில் திராவிடம் என்று ஒரு மொழி இல்லை. திராவிடம் என்கிற மொழியிலிருந்துதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் போன்ற மொழிகள் பிறந்து வந்தவையாகக் கருதுவது பிழையான கருத்து.
தமிழிலிருந்தே சமற்கிருத , பிராகிருத மொழிகளின் கலப்புகளால் மற்ற மொழிகள் எல்லாம் படிப்படியாகத் திரிந்து வேறு வேறு மொழிகளாயின.
தமிழே தமிழ்நாடு முழுக்க மட்டுமன்று, இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற அன்றைய நாவலந் தீவில் இருந்த பல நாடுகளிலும் பேசப்பட்ட மொழியாக இருந்தது .
தமிழ் மொழியைப் பிற மொழியினர் தங்கள் மொழிப் பலுக்கலுக்கு ( உச்சரிப்புக்கு ) ஏற்பவே சுட்டினர்.
ஆங்கிலேயர் எப்படி டாமில் (Tamil) என்கின்றனரோ, பிரெஞ்சுக்காரர்கள் எப்படி டமுல் என்று நம் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றனரோ
அப்படியே களப்பாளர்கள் (களப்பிரர்கள்) நம்முடைய தமிழ் மொழியை ‘த்ரமிள்’என்றே குறிப்பிடலாயினர்.
அவர்களின் வாய்மொழிக்கு அவ்வாறே அவர்களால் பலுக்க (உச்சரிக்க) முடிந்தது. அவ்வகையிலேயே கி.பி.460 களில் அவர்கள் அமைத்த ‘சங்கத்’திற்குத் ‘த்ரமிள சங்கம்’என்று பெயரிட்டனர்.
ஆக, தமிழே – த்ரமிள – த்ரமிட – திராவிட என்றவாறு பிராகிருத, சமசுக்கிருத மொழியாளர்களால் குறிப்பிடப்பட்டது.
ஆக – திராவிடர் – என அவர்கள் தமிழரையே குறிப்பிட்டனர்.
அவ்வகையில் ஆரியரல்லாத, ஆரியப் பார்ப்பனியரல் லாதவர்கள் ‘திராவிடர்கள்’ என்பதாக அவர்களால் அறியப் பெற்றனர்; அவர்களின் இலக்கியங்களில் பதிவு செய்தனர்” என்று திராவிடம் என்பதே இல்லாத ஒன்று என்று பாவலரேறு கூறுகிறார்.
திராவிடம் என்னும் சொல் தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல், சமற்கிருதம் இல்லாமல் திராவிடமும் இல்லை திராவிடரும் இல்லை . ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழே ” என்பதும் ” தமிழகத்தில் இருந்து வெளியே இருந்த தமிழர்களை ஆரியர்கள் கூறிய சொல்லே திராவிடம் ” என்றும் “அது ஒரு போதும் தமிழகத்தில் இருந்தவர்களை அவர்கள் குறிக்க பயன்படுத்தியது இல்லை ” என்பதும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கருத்து.
வடபுலத் தமிழரே ஆரியர் வருகைக்குப் பின்னர் சமஸ்கிருதம் என்னும் அவர் மொழி செய்துவிட்ட பின்னர் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர் என்கிறார் பாவலரேறு .
அதாவது ஆரியர் வருகைக்கு முன்பாக திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை ஆரியர் வருகைக்கு பின்பே தமிழர்கள் த்ரமிளர் என்று அழைக்கப்பட்டு த்ரவிடர் என்று மருவி திராவிடர் என்பதாக ஒரு பெற்றுள்ளது எனவே தமிழர் என்பதன் வடமொழிச் சொல்லே திராவிடர் என்பதாக நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்
அதேநேரத்தில் திராவிடம் என்பது மொழியியல் ரீதியாக இன்றும் நிலைத்திருப்பதற்குக் காரணம் மொழியியல் ஆய்வாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் அன்று ஆதிக்கம் செலுத்தி வந்த வட மொழி சார்ந்து தங்கள் ஆய்வை முன்வைத்தது முக்கியமான காரணம்.
தமிழ் என்பதை திராவிடம் என்பதாக புரிந்துகொண்டு தமிழ் மொழியிலிருந்து பிரிந்த தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்தை தமிழ் மொழிக் குடும்பம் என்று முன்வைக்காமல் தவறாகப் புரிந்து கொண்டு திராவிட மொழிக் குடும்பம் என்று கூறினர்.
இதை வேரிலிருந்து ஆய்வைத் தொடங்காமல் இலையின் நுனியில் இருந்து ஆய்வைத் தொடங்கியதாக பாவாணர் கண்டிக்கிறார் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் கால்டுவெல் அவர்களே இதுகுறித்து அடுத்து பார்க்கலாம்