சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் ஐயா இளங்குமரனார்.
திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ஆம் ஆணடு தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற புலவர் 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உதவிகளையும், தமிழ்வழி திருமணங்களையும் நடத்தி வைத்தவர்.
செந்தமிழ்ச்சொற்பொருட்களஞ்சியம் (14தொகுதிகள்) தேவநேயப்பாவாணரின் ‘தேவநேயம்’ (10தொகுதிகள்) முதலான அரிய நூல்கள் இருக்கும் வரை அய்யா இளங்குமரனார் புகழ் இருக்கும். அய்யா செய்த தமிழ்த் தொண்டுக்கு தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்