மோடியை எதிர்கொள்வது எப்படி- 5

க.இரா. தமிழரசன்

      ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் சுயேட்சையாக நின்று வென்றதற்கு பணபலம் மட்டும் தான் காரணம் என்று நாம் பொதுப்படச் சொல்லிட முடியாது. ஒரு வாக்குக்கு 20,000 கொடுத்திருந்தாலும் பா.ஜ.க வென்றிருக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

      இந்த தேர்தலில் மூன்று பேருக்கு இடையே தான் போட்டி

1. ஆளுங்கட்சி சார்பாகவும், இரட்டை இலை சின்னத்தோடும் நின்ற மதுசூதனன். 2. தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் 3. சுயேட்சையாகப் போட்டியிட்ட தினகரன். இந்த மூவரில் தினகரனும், மதுசூதனனும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை இறக்கினார்கள். தி.மு.க

ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள் நல்லது.

    பணம் கொடுக்காததால் தான் திமுக தோற்றது என்பது மிகவும் வேடிக்கையான ஒன்று. அப்படியானால் இதற்க்கு முன்பாக வெற்றி பெற்ற  போதெல்லாம் பணம் கொடுத்துத் தான் வென்றார்கள் என்பதை அக்கட்சி ஏற்றுக் கொள்ளுமா?

   பணம் மட்டுமே “வேட்பாளருக்கு” வெற்றியைத் தந்து விடாது, குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் பண விநியோகம் நடக்கிறது என்ற காரணத்தைக் கூறி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு வேளை தேர்தல் நிறுத்தப்படாமல் நடத்தியிருந்தால்” தினகரன் ” வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகமே. அப்போது தி.மு.க வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் இருந்தது.

   அனைத்து ஊடகங்களிலும் தினகரனுக்கு  மூன்றாவது இடம் தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 8 மாத காலத்தில் தினகரனுக்கு கருத்துக் கணிப்பில் முதலிடம் கூட சில ஊடகங்களில் வெளியாயின.

     இந்த 8 மாத கால இடைவெளியில் தினகரனுக்கு வாக்கு விழுக்காட்டை கூட்டியது எது?

  தினகரன் மீது தமிழக எடப்பாடி அரசும், மத்திய மோடி அரசும் கொடுத்த அழுத்தங்கலும் அவற்றை தினகரன் எதிர் கொண்ட விதமுமே அவருக்கு வாக்கு விழுக்காட்டை அதிகரித்தது.

  ஆர்.கே.நகரில் வாக்கு பதிவு நடைபெறுகிற நாளில் தான் 2G தீர்ப்பும், தினகரன் மீதான வழக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை இருவரும் எதிர்கொண்ட விதம் முக்கியமானது.

     பண மதிப்பு நீக்கம் அறிவித்த ஓராண்டு முடிவு நினைவாய் அதை எதிர்த்து தி.மு.க மாவட்ட தலைநகரம் முழுக்க ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் மோடி – கருணாநிதி சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்குப் பின்பாக பல்வேறு மாவட்டங்களில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள்” மழையை” காரணம் காட்டி நிறுத்தப்பட்டது.

 மோடியும் – ஸ்டாலினும் -கனிமொழியும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாயின. இந்தப் படங்களை தி.மு.க வினரே இரசிக்கவில்லை.

  மோடி – கருணாநிதி – ஸ்டாலின்  சந்திப்புக்குப் பிறகு மோடி எதிர்ப்பு என்பது ஸ்டாலினாவிடம்  எதிர்பார்க்க முடியாததாகிப் போனதாகவே மக்கள் கருதத் தொடங்கினர்.

 2ஜி முறைகேட்டிலிருந்து கனிமொழி-ஆ.ராசா விடுதலை அறிவிக்கப்பட்டவுடன் மோடி – ஸ்டாலின்-கனிமொழி கூட்டு உண்மை தான் என்பது போல தி.மு.கவினரும் எண்ணத் தொடங்கியதன் விளைவாக அவர்களும் சேர்ந்து தினகரனுக்கு வாக்களித்து விட்டனர்.

தினகரனின் மோடி ஏதிப்புப் பேச்சை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். எடப்பாடியும்- ஓ. பி.எஸ் ம் அ.தி.மு.கவுக்கு தலைமை தாங்குவதைவிட தினகரன் பொருத்தமாக இருப்பார் என்று அ.தி.மு.கவினர் எண்ணத் தொடங்கினர். மோடி அரசோடு கூட்டு சேர்ந்து ஒ.பி.எஸ்-ஈ.பி.எஸ் நடத்தும் நாடகத்தை அவர்கள் கட்சியினரே வெறுத்தார்கள். ஜெய வலிதா போன்று ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத நேரத்தில் இவர் சரியாக இருப்பாரோ என்று என்ன வைத்து விட்டனர் இதற்கு எடப்பாடி- ஓ.பி.எஸ்.எவ்வளவு முக்கியமான காரணிகளோ. அதே அளவுக்கு ஸ்டாலினும் ஒரு காரணம்.

    – இது நமக்கு ஒன்றைப் புலப்படுத்துகிறது மோடி அரசின் மீது மக்கள் வகைதொகையில்லாத கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்து ஊதுகிற பொம்மையாக எடப்பாடி- ஒ.பி.எஸ் இருக்கிறார்கள், அவர்களை எதிர்த்து அரசியல் செய்வதற்க்கு போதுமான ஆற்றலோடு ஸ்டாலின் இல்லை. எனவே, மக்கள் புதிய தலைவரைத் தேடுகிறார்கள். தினகரன் பொருத்தமானவர் என்று நாம் கருதவில்லை. மக்களைக் கருத வைத்து விட்டார்கள்.

  இப்படிதான் 22 ஆண்டு கால குசராத் பா.ஜ.க ஆட்சியாலும் மோடியின் பண மதிப்பு-ஜி எஸ்.டி போன்ற கொள்கையாலும் வெறுத்துப் போயிருந்தவர்கள் புதிய தலைவர்களைத் தேடினார்கள்.

 அவர்களுக்கு ‘ஹர்திக் பட்டேலும் ”விக்னேஷ் மேவானியும்’ உர்ஷித் தாகூரும் கிடைத்தார்கள்.

  ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் பின்னணியில் வந்தாலும் இவர்கள் தான் மோடிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தவர்கள். இங்கு எப்படி “தினகரன்- சசிகலா” குடும்பத்தை ஒழித்துக்கட்ட பா.ஜ.க முயற்சி செய்ததோ அதைவிட கீழான நிலைக்கு குசராத்தில் நடந்து கொண்டது.

        குசராத்தில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டு பா.ஜ.க 22 ஆண்டுகளுக்கு முன்பாக ஆட்சிக்கு கட்டில் ஏறுவதற்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அந்த மாநிலத்தின் பெரும்பான்மையாக வாழக்கூடிய படேல் சமூகத்தவர் தான்.

   அந்த படேல் சமூகம் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறியிருந்தது. அதற்குக் காரணம் ஹர்திக் படேல்.

   படிதார் அனாமத் அந்தோலன் என்கிற அமைப்பை  இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்து படேல் சமூகத்தவருக்கு  இட ஒதுக்கீடு கேட்டு பல லட்சம் மக்களை திரட்டி போராட்டம் நடத்தினர் .

படேல் சமூகத்தவர்தான் குசராத் அரசியலிலும் அதிகார வர்க்கத் திலும் முன்னனியில் இருக்கின்றனர் என்பது தான் எதார்த்தம் இந்த படேல் சமூகத்தவர் போராட்த்தை பா.ஜ.க அரசு கடுமையாக ஒடுக்கியது .

ஹர்திக் படேலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்தது இதனால் படேல் சமூகத்தவர் பா.ஜ.க மீது வெறுப்பு கொண்டிருந்தனர். இதனோடு சேர்த்து பண மதிப்பு நீக்கம்.ஜி.எஸ்டியும் இணைந்து கொண்டதால் அந்த வெறுப்பு மேலும் கூடியது –                       

  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் படேல் சமூகத்தினர் 58 விழுக்காடு பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருந்தனர் .ஆனால் , இம்மாத தொடக்கத்தில் ஏ.பி.பி நடத்திய கருத்துக் கணிப்பில் அந்த ஆதரவு20 விழுக்காடாக குறைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளாக பாஜகவை ஆட்சியில் அமர வைத்த படேல் சமூகமே பா.ஜ.க வுக்கு எதிராக இருப்பதால் அவர்களின் ஓட்டை கவர வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது.

 ஜி.எஸ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் வெறுப்பை குறைப்பதற்காக பட்டு உள்ளிட்ட 177 பொருட்களின் வரியை குறைத்ததை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இப்போது ஹர்திக் படேல் பின்னாளில் அணிதிரண்டவர்களை சமாளிப்பதற்காக இரண்டு அஸ்திரங்களை பாஜக ஏவியதைப் பார்ப்போம்.

 முதலாவதாக படேல் சமூக போராட்டக் குழுவினரை பாஜகவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களுக்கு விலை பேசியது. அதை எல்லோர் முன்னிலையிலும் ஹர்திக் படேலுடன் இணைந்திருக்கும் நரேந்திர படேல் அம்பலப்படுத்தினார்.

“பாஜகவில் இணைந்தால் ஒரு கோடி தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் முன் பணமாக ரூ10,00,000 தந்ததாகவும்” தொலைக்காட்சி முன்பாக பணத்துடன் பேட்டியளித்தார்.

அதற்கு முன்பாக படேல் போராட்டக் குழுவிலிருந்த வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் பணத்தை வாங்கிக் கொண்டு பாஜகவில் இணைந்து விட்டனர். இப்படி பணத்தை காட்டி போராட்டக் குழுவை உடைத்து .

இந்த அணுகுமுறை ஹர்திக் படேலிடம் பலிக்காததால் ஹர்திக் படேல் ஒரு ஹோட்டலில் பெண்ணுடன் நெருக்கமாக உல்லாசமாக இருக்கும் காணொலியை வெளியிட்டு அவரைப் பற்றிய பிம்பத்தை அசிங்கப் படுத்தும் வகையில் கேவலமான வேலையைச் செய்தது.  தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்ய பாஜ.க தயங்காது என்பதை இது நமக்கு புரிய வைக்கும்.

அடுத்து ஜிக்னேஷ் மேவானியுடன் கூட்டு வைத்ததால் காங்கிரஸ் ” சாதி அரசியல் ” செய்வதாகப் பேசியது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *