மோடியை எதிர்கொள்வது எப்படி -8. ?
தேர்தல் கம்யூனிஸ்டுகள் தீர்வு தருவார்களா ?
மோடியை எதிர்கொள்வது என்பது இந்துத்துவத்தை எதிர்கொள்வது.மோடியை எதிர்கொள்வது என்பது RSS ஐ எதிர்கொள்வது. எனவே இந்துத்துவத்திற்கெதிரான RSS க்கு எதிரானவர்கள் தான் மோடியை எதிர்கொள்ள முடியும்.
காங்கிரஸ் ஒருபோதும் RSS ஐ எதிர்க்கப் போவதில்லை, இந்துத்துவத்தை எதிர்க்கப் போவது இல்லை.
2012 – இல் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியை மரண வியாபாரி என்றழைத்த காங்கிரஸ்,இந்த முறை அப்படி அழைக்கவில்லை மறந்தும் கூட இந்துத்துவத்தை கண்டிக்கவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்களுக்கு ராகுல் காந்தி ஏறி இறங்கி,தான் ஒரு சிவனை வழிப்படுகிற இந்து என பெருமையாக பல மேடைகளில் கூறிக் கொண்டார். இது தான் ராகுல்.இவரை நம்பித்தான் காங்கிரஸ். எனவே இப்படியான சூழ்நிலையில் இந்துத்துவத்தை எதிர்க்க கூடியவர்கள் இடதுசாரிகள் மட்டும் தான்.
இந்தியாவிலுள்ள இடதுசாரிகளிடம் உள்ள சிக்கலை புரிந்து கொண்டால் இன்னும் நமக்கு சில தெளிவு கிடைக்கும் .
இந்துத்துவா என்பது வெறும் இந்து மதக் கருத்தியல் மட்டுமல்ல. அது ஒரு இந்து தேசத்தை கட்டமைக்க விரும்புகிற கருத்தியலைக் கொண்டது.
எனவே தான் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசங்களின் மொழி, இன, பண்பாட்டு வரலாறுகளை அழித்து விட்டு,ஏக இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகிறது.இங்கு தான் கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கடி வருகிறது.
இந்துத்துவ எதிர்ப்பில் சாதி, மதம், கடவுள் போன்ற கருத்தியலில் நம்மோடு நிற்பவர்கள் தேச உரிமை என்று வருகிற போது இந்துத்துவத்தோடு இணைந்து விடுகிறார்கள்.
தேசிய மொழி, தேசிய இனம் என்று பேசினாலே இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற கம்யூனிஸ்ட்டுகளால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
தமிழ் தேசியம் என்று பேசினால் எப்படி இந்துத்துவாதிகளுக்கு எரிச்சல் வருகிறதோ அப்படியே தான் இங்குள்ள கம்யூனிஸ்ட்களுக்கும் எரிச்சல் வருகிறது. இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் தங்களின் உரிமைகளுக்காக, போராடுகிற போது அவர்களோடு இந்திய கம்யூனிஸ்டு களால் ஒன்றிணைய முடிவதில்லை.
நாகலாந்து ,அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் இந்திய அரசுக்கு எதிராகப் போராடுவதை தேர்தல் கம்யூனிஸ்டுகளால் அங்கீகரிக்க முடிவதில்லை.
அரசின் ஒடுக்குமுறையையை அவர்கள் அங்கீகரிக்கவும் செய்கிறார்கள் ஏனெனில் இந்தியாவை அவர்கள் ஒரு தேசமாக கருதுகிறார்கள். அந்த தேசத்திற்கு எதிரானவர்கள் மீது அவர்களுக்கு கோபம் வருகிறது.
மாட்டுக்கறி தின்பதற்கு மோடி அரசாங்கம் தடை விதிக்கிற போது அதற்கு எதிராக பேசக் கூடிய தேர்தல் கம்யூனிஸ்டுகள் நீட்டுக்கு எதிராகப் பேசுவதில்லை.
இந்திய மேலாதிக்கம் நேபாளம் மீது செயல்படுவதைக் கண்டிக்க கூடியவர்களால் ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கத்தை கண்டிக்க முடிவதில்லை.
காவிரி ஆற்றின் உரிமை கர்நாடகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்டுகளால் பேசமுடிவதில்லை.
முல்லை பெரியாற்றின் உரிமையை கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்டுகளால் பேசமுடிவதில்லை.
காஷ்மீருக்காக இந்தியா முழுவதுமுள்ள இந்திய கம்யூனிஸ்டுகளால் பேசமுடியவில்லை.
ஏனெனில் தேசிய உரிமைகளை மிதித்து விட்டுத்தான் இந்தியக் கட்சியைத் தேர்தல் கம்யூனிஸ்டுகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக் கூடாரம் என்பதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டவர்களால் மட்டும் தான் ஏகபோக இந்தியாவை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள முடியும்.
இந்துத்துவா என்பது மத ரீதியாக மட்டுமல்ல புவியியல் ரீதியாகவும் அது தனக்கான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அதனால் தான் அது இந்து தேசத்தை கட்டமைக்க விரும்பி தேசிய இனங்களை ஒடுக்குகிறது.
இந்த ஒடுக்குமுறையை கம்யூனிஸ்ட்டுகள் கேள்வி எழுப்பாமல் இந்துத்துவாவோடு கூட்டு சேர்ந்து கொள்வதால் அவர்களாலும் இந்துத்துவத்தை முழுமையாக எதிர்கொள்ள முடியாது .
ஏனெனில் இந்தியா என்பதே செயற்கையாக துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்ட நாடு .
பொருளாதார சுரண்டல் நலனுக்காக ஆங்கிலேயனும்,
மத ஆதிக்க நலனுக்காக பார்ப்பானும் இணைந்து உருவாக்கிய நாடு.அதைக் காப்பாற்ற வேண்டிய தேவை சுரண்டுகிறவர்களுக்கும் மத ஆதிக்கத்தை விரும்புகிறவர்களுக்குமே தேவை.
அந்த அடிப்படையில் தான் பொருளாதார சுரண்டல் வாதிகளிடம்(பன்னாட்டு நிறுவனம்,ஏகபோக இந்திய முதலாளிகள், தரகு முதலாளிகள்)இந்துத்துவம் கூட்டு வைத்து கொண்டு செயல்படுகிறது.
தேசிய விடுதலை பேசக் கூடியவர்கள், சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடுகிற பொதுவுடைமையர்களின் கூட்டு தான் மோடியை வீழ்த்தும் – இந்துத்துவத்தை வீழ்த்தும்.
இங்கு தான் நமக்கு பெரியார் வழிகாட்டுகிறார். புரட்சியாளர் அம்பேத்கரை உள்வாங்கி கொண்ட RSS ஆல் பெரியாரை உள்வாங்கி கொள்ளமுடியாததை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுள்,சாதி, மதம்,பெண்ணடிமை என பார்ப்பனியத்தின் கோர முகங்களை பெரியாரும் அம்பேத்கரும் சமரசமின்றி அம்பலப்படுத்தினார்கள், போராடினார்கள்.அதன் இன்னொரு முகமான தேசிய ஒடுக்குமுறையை பெரியார் தான் இணங்கண்டு அம்பலப்படுத்தினார் போராடினார்.
“தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இந்தியத்துக்கு எதிரான முழக்கம் தான். இன்றைய இந்துவத்திற்கும் எதிரான முழக்கம்.தேசிய இன ஒடுக்குமுறையில் தான் இந்துத்துவம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே தேசிய விடுதலை அரசியல் அதிலும் குறிப்பாக சாதி ஒழிக்கும் திட்டத்துடன் கூடிய அரசியல் திட்டம் தான் இந்துத்துவத்தை வீழ்த்தும்.
(முற்றும்)