மோடியை எதிர்க் கொள்வது எப்படி – 3  ?

க.இரா.தமிழரசன்

“இந்தியாவின் எதிரி நாடு பாகிஸ்தான் “

‘இந்துக்களின் எதிரி இஸ்லாமியர்கள்’ என்ற பிம்பத்தை பல ஆண்டு காலமாகவே ஆர்.எஸ்.எஸ் ம் பா.ஜ.க.வும் கட்டமைத்து வருகின்றன.அந்த மையப் புள்ளியிலிருந்துதான் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைக் காட்டி குசராத்தில் மிகப் பெரும் கலவரத்தை 2002 ல்

ஆர்.எஸ்.எஸ் ம் பா.ஜ.க வும் நடத்தியது. அன்று அதை முன்னின்று நடத்தியது அன்றைய குசராத் முதல்வரும் இன்றைய பிரதமருமான மோடியும், அன்றைய குசராத்தின் உள்துறை அமைச்சரும் இன்றைய பா.ஜ.க.வின் தலைவருமான அமித்ஷாவும் தான்.

   2002ம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,50,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின்  சொத்துக்கள்  சூறையாடப்பட்டன.

  சிறிய, பெரிய வழிப்பாட்டுத்தலங்கள் இடித்து தள்ளப்பட்டன. 151 நகரங்கள், 993 கிராமங்களில் முஸ்லிம்களின் குருதி ஓட்டப்பட்டது. வதோதரா, பஞ்ச்மஹல், தாஹோத், நர்மதா, பரூச், அஹ்மதாபாத், ஆனந்த், கேதா, மெஹ்ஸாரா, பனஸ்காந்தா ஆகிய மாவட்டங்கள் இனப் படுகொலையின் கோரத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டன.

இந்தப் படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே இசுலாமியா்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள்,  உணவகங்கள், ரெஸ்டாரெண்ட்கள், இசுலாமியர்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. 

  மாவட்ட அதிகாரமும் காவல் துறை நிர்வாகமும் கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது. கூடுதலாக அவர்களும் கலவரத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

குஜராத் தலைநகரான காந்தி நகரில் பிப்ரவரி 27 அன்று நடந்த போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் ” நாளை நடக்கவிருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின் போது காவல்துறை தலையிடக் கூடாது” என்று முதல்வர் மோடி கட்டளையிட்டார் என்பது ஊரறிந்த உண்மையாகும். நரேந்திர மோடியின் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா இது தொடர்பாக மக்கள் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

27 பிப்ரவரி அன்று காவல்துறை மூத்த அதிகாரிகளுக்கு மோடி கட்டளையிட்ட விவரம் குறித்து தன்னுடைய தந்தையிடமும் தெரிவித்திருக்கின்றார், ஹரேன் பாண்டியா, மோடியின் தவறுகளுக்கு அதிகாரப்பூர்வமான, நேரடியான சாட்சியாக இருந்த பாண்டியா மோடி -அமித் ஷா கும்பலால்  படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைக்கவோ, நீதியை பெற்றுத்தரவோ இயலவில்லை. “ஆதாரம் இல்லை” என்று சப்பைக்கட்டு கட்டி 3000க்கும் அதிகமான வழக்குகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது.

நீதித்துறையையும், காவல் துறையையும் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு மோடி கும்பல் சுதந்திரமாக திரிகின்றது.

இஸ்லாமியர்களை அச்சத்தில் வைத்துள்ளது.

அதே பார்முலாவை இந்தத் தேர்தலிலும் கையில் எடுத்தாலொழிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்குகளை அல்ல முடியாது என்பதை மரண வியாபாரி “மோடி” நன்கு தெரிந்து வைத்திருந்தார்

  முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்பு வெளியானதால் இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரையில் இசுலாமிய வெறுப்பு பரப்புரையை மோடி தொடங்கி வைத்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படையலை குசராத்தின் முதல்வராக்க பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு விரும்புவதாகவும்,அதற்காக மணிசங்கர் அய்யர் உடன் பாகிஸ்தான் தூதர் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அடுத்ததாக மன்மோகன் சிங்குக்கும் பாக்கிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக நஞ்சை கக்கினார்.

ராமர் கோவில் கட்ட விடாமல் காங்கிரஸ் தடை செய்கிறது என்று கூறி,பாபர் மசூதி இடிப்பை நினைவுபடுத்தினார்.

சோனியா இத்தாலி காரி வெளிநாட்டு மருமகள்,

ராகுல் கிறித்தவன் வெளிநாட்டு மருமகன் என்றார்.நான் மண்ணின் மைந்தன் என்று சொல்லி அழுதார் குஜராத்துக்கு தேவை கோவிலா, மசூதியா..? என்று கேள்வி  எழுப்பினார்.

இஸ்லாமியர்கள் மீது உளவியல் அச்சத்தை உருவாக்கினார். இதன் மூலம் தேர்தல் களத்தில் இருந்து இஸ்லாமியர்களை அப்புறப்படுத்த தொடங்கினார்கள்.

மோடியின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி  கொள்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வெறுத்துப் போயிருந்த நடுத்தர வர்க்கத்திற்கு  இந்துத்துவ வெறியைப் புதுப்பித்தார்.

2002கலவரத்தை இஸ்லாமியர்களுக்கு நினைவுபடுத்தினார். கடந்த முறை தேர்தலில் வாக்களித்தவர்களில் 85 இலட்சம் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 300 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

இப்படித்தானே 1998 இல் 117 இடங்களை வென்றிருந்த பாஜக குஜராத் கலவரத்திற்கு பின் 217 இதழ்களை பிடித்தது .

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *