மோடியை எதிர் கொள்வது எப்படி  – 7

காங்கிரசோடு கூட்டு சேரலாமா ?

   குசராத்தில் எந்த சாதி அரசியலை பா.ஜ.க  22 ஆண்டுகளுக்கு முன்பாக கையிலெடுத்ததோ அதே “சாதி அரசியல்” தான் மோடிக்கு எதிராக வந்து நின்றது .

     95 வரை ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்த படேல் – பார்ப்பனர் – பழங்குடியினரை தன் பக்கம் ஈர்க்க , பாபர் மசூதி இடிப்பு – இராமர் கோவில் கரசேவை அரசியலை பரப்பி அதில் வெற்றி பெற்றது.

இன்றோ  படேல் – பார்ப்பனர் – தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினரை காங்கிரஸ் தன் பக்கம் ஈர்த்து விட்டதால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியாகி விட்டது. எனவே, காங்கிரஸ் ” சாதி அரசியலில் ” ஈடுபடுகிறது என பா.ஜ.க.குற்றம் சாட்டியது.

       குசராத்தில் காங்கிரஸ் ” சாதி அரசியல்” செய்கிறது என்று சொன்ன பா.ஜ.க. தான் உ.பி யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் “சாதி அரசியல்” செய்தது.

          உ.பி யில் இருக்கும் ஒவ்வொரு சாதிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தான் பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட்டு வென்றது. அதே பார்முலாவைத் தான் தற்போது தமிழகத்திலும் செய்து கொண்டிருக்கிறது.

     தமிழகத்திலுள்ள பள்ளர் சமூகத்தை மரு.கிருட்டிணசாமி தலைமையில் இயங்கும் புதிய தமிழகம் கட்சி வாயிலாக இழுத்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சாதிக் கட்சிகளையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது.

எனவே பா.ஜ.க தேவைப்பட்டால் “சாதி அரசியல்” செய்யும். இல்லாவிடில் “மத அரசியல்” செய்யும்.ஏனெனில் இவ்விரண்டும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அரசியல். சாதி இல்லாமல் இந்து மதம் இல்லை என்பதால் சாதி அரசியலும் – மத அரசியலும் இந்துத்துவத்தை வளர்க்கவே செய்யும். இவ்விரண்டு அரசியல் மூலமாகத்தான் இந்தியா முழுக்க பா.ஜ.க. தனது ஆட்சியை நிறுவிக் கொண்டிருக்கிறது.

      இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களில் 19 மாநிலங்களில் பா.ஜ.க.ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை நிறுவிக் கொண்டிருக்கின்றனர்.

        பணத்தை தண்ணீராக இரைத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை கூட தங்களின் பக்கம் இழுத்து கொண்டிருக்கின்றனர்.

      பா.ஜ.க. அடுத்த ஆண்டு ஐந்து மாநிலத் தேர்தல்களைத் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. கருநாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர அனைத்து சாம, பேத, தான, தண்ட வழிகளில் இறங்கியிருக்கிறது.

          மீண்டும் பா.ஜ.க வின் இந்த வளர்ச்சியை காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது என்பது தான் கள யதார்த்தமாக இருக்கிறது.

 ஒரு வேளை காங்கிரஸ் பா.ஜ.க.வை எதிர்க்கும் அளவுக்கு மீண்டும் வலிமையைப் பெற்று விடுகிறது என்று கற்பனையாகக் கூட வைத்துக் கொள்ளலாம். காங்கிரசை நம்பி நாம் அணி திரள முடியுமா? நிச்சயம் முடியாது.

        ஏனெனில் பா.ஜ.க. தீவிர இந்துத்துவம் பேசுகிறது என்றால் காங்கிரஸ் மிதவாத இந்துத்துவம் பேசுகிறது அவ்வளவுதான் .

       பா.ஜ.க. இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டை காடாக்குவதற்கு முன்பு இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்டதே காங்கிரஸ் தான்.

       பா.ஜ.க. மட்டும் இந்தி திணிப்பை மேற்கொள்ளகொள்ளவில்லை காங்கிரஸ் காலத்தில் நாம் இந்தித்திணிப்புக்கெதிரான போரை நடத்தியிருக்கிறோம்.

பா. ஜ. க. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து “ஒரே நாடு -ஒரே வரி ” என்று பேசுவதற்கு தொடக்கப்புள்ளியே காங்கிரஸ் தான். ஜி.எஸ்.டி. வரியை காங்கிரஸ் எதிர்க்கவில்லை,அதிக வரியைத் (28%)தான் காங்கிரஸ் எதிர்க்கிறது.

அ. தி. மு.க. வை உடைத்து நிழல் அரசியல் பா. ஜ. க. செய்வது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு தி.மு.க. வை உடைத்து அ.தி.மு.க. வை உருவாக்கியதே காங்கிரஸ்தான்.

          மிசாவை வைத்து இந்தியா முழுக்க காட்டாட்சி நடத்தியது காங்கிரஸ்தான்.

 தனக்கு ஒத்துவராத மாநில கட்சிகளின் ஆட்சியை பிரிவு 356 -ஐ பயன்படுத்தி கலைப்பது காங்கிரசின் கை வந்த கலை.

வெளியுறவுக் கொள்கையில் கூட தமிழர் விரோத போக்கை பச்சையாக கொண்டிருந்தது. காங்கிரஸ் -அதனால்தான் அது ஈழத்தமிழரை படுகொலை செய்தது.

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை  காங்கிரஸ் எதிர்க்கிறது -பா. ஜ. க. வெறுக்கிறது அவ்வளவுதான்.

இப்படியாக வரலாற்றில் காங்கிரஸ் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே,பா.ஜ. க. வை எதிர்க்க காங்கிரஸ் பின்னால் சென்றால் நாமும் இந்துத்துவத்தின் ஆதர்வாளர்களாக, பன்னாட்டு நிறுவனக் கொள்கைக்கு ஆதரவாக,மாநில உரிமைப் பறிப்புக்கு ஆதரவாக செல்ல வேண்டுமே தவிர,வேறொன்றும் செய்ய முடியாது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *