மோடி எதிர்கொள்வது எப்படி- 2 ?
க.இரா. தமிழரசன்
குஜராத் தேர்தலை நடத்தியதே மோடிதான் ….
இமாச்சலப் பிரதேசத்திற்கும் குஜராத்திற்கும் வரும் ஜனவரி மாதத்தோடு பதவி காலம் முடிவடைவதால் இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேதி அறிவித்து தேர்தல் நடத்தி இருக்கவேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் இமாச்சலப் பிரதேசத்திற்கு நவ – 9 தேதி வாக்கு பதிவு என்றும் டிச-18ம் தேதி வாக்கு என்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துவிட்டு குஜராத் தேர்தல் தேதி அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது.
வெள்ள நிவாரணப் பணி இன்னும் முடியாமல் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவித்தால் நிவாரணப் பணி மந்தமாகிவிடும் என்ற காரணத்தை தேர்தல் ஆணையம் சொன்னாலும் உண்மை அதுவல்ல. குஜராத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்தினால் பா.ஜ.க. பின்னடைவைச் சந்திக்கும் என்று களநிலவரம் இருந்ததால் புதிய திட்டங்களை அறிவிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி மோடியும் , குஜராத் பா.ஜ.க அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் வாரி வழங்கியது.
பிரதமர் மோடி பலமுறை குஜராத்திற்கு சென்று அறிவிக்கப்படாத தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்தினார்.உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் தன்னுடைய பங்குக்கு இஸ்லாமிய வெறுப்பைத் தூவிவிட்டு வந்தார்.
பா.ஜ.க. தவிர்த்து அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான இந்த செயலைக் கடுமையாக திறனாய்வு செய்தனர்.
“பிரதமர் மோடி தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் அதிகாரத்தை வழங்கியுள்ளது, மாநிலத்தில் அனைத்து இலவச திட்டங்களையும் வழங்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையம் தனது விடுமுறையை முடித்து கொண்டு தேர்தல் தேதியை அறிவிக்கும் ” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப .சிதம்பரம் தனது டிவிட்டரில் காட்டமாகவே கேள்வி எழுப்பினார். எதற்கும் தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்கவில்லை.
மோடி குஜராத்திற்குச் சென்று செளராட்டிரா பகுதியையும் குஜராத்தின் தென் பகுதியையும் இணைக்கும் வகையிலான படகு சேவைக்கும் மற்றும் வதோத்தரா மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டிவைத்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் வாக்கு பதிவுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் (Exit poll) பா.ஜ.க.வெற்றி பெரும் என்ற கருத்து கணிப்பு வெளிவந்தது. அதோடு தற்போது குஜராத்தில் தேர்தல் நடந்தால் பா.ஜ.க 110 முதல் 125 இடங்களைப் பிடிக்கும் என தனியார் நிறுவனம் ஒன்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இதற்குப் பின் தான் குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளையும் மோடியின் கண்ணசைவில் நடத்தியவர் யார் தெரியுமா ?…
குஜாரத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலராக பதவி வகித்தவர்தான் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இவரை வைத்துக் கொண்டு எல்லா தில்லு – முல்லு வேலைகலையும் பா.ஜ.க செய்து கொண்டது.
பா.ஜ.க தலைவர்கள் வீட்டிலேயே பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் (காந்தி பிறந்த மண்) வாக்காளர்களுக்கு தருவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது . இதைத் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் ,காங்கிரஸ் கட்சியை சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடிக்கு முடக்கியது. ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியதலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இராகுலின் பிராச்சாரத்தை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகள் மீது கூட வழக்கு பதியப்பட்டன. மோடி பேசிய இசுலாமிய வெறுப்பு பேச்சுகளை ஆணையம் கண்டு கொள்ளவில்லை.
தேர்தலில் வாக்களித்து விட்டு மோடி பேரணியாகச் சென்றதைக் கூட தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்டு பல்வேறு கட்சிகள் சந்தேகம் எழுப்பிய நிலையிலும் , சில தொகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும் வெளியிடப்பட்ட எண்ணிக்கைக்கும் மாறுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டியும் அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்படித்தான் குசராத்தில் தேர்தல்அதிகாரிகள் தேர்தலை நேர்மையாக ( ? ) நடத்தினார்கள். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அனைவரையும் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தான் இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வெற்றியடைந்தது.
நீதித்துறை உள்ளிட்டு குசராத் அரசின் அனைத்து துறைகளும் காவி மயமாகி இருப்பதால் அவர்களால் அதை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் மோடி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாக இசுலாமிய வெறுப்பு உணர்வைத் தூண்டினார்.
(தொடரும்)