ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம்
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று தமிழ்நாடு முழுக்க “ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு ” என்று கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம் வேதாந்தா. அதன் உரிமையாளர் அனில் அகர்வால். லண்டன் பங்கு சந்தையில் பட்டியிலடப்பட்ட முதல் நிறுவனம் இது.
வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டெர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகிறது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஒரிசாவில் இந்த வேதாந்தாவை எதிர்த்து கடும் போராட்டம் நடந்தது தனி வரலாறு.
மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு கடலோர பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, மஹாராஷ்ட்ர அரசு இதற்கான ஒரு ஆய்வு குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, 1993 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பின்தான், அந்நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது.
இது குறித்து பேசும் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், “1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. அந்நிறுவனத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கோரியது. சூழலியல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. இதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அந்நிறுவனம் செய்ய வேண்டும். ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டது.”என்கிறார்.
.
1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடக்கோரியது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில், நூறு கோடி அபராதம் அளித்து நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.
தற்போது சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது இரண்டாவது ஆலையை நிறுவ உள்ளது இந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலை. புதிதாக நிறுவ உள்ள இந்த ஆலை, ஏற்கெனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது. இதனால் பாதிப்புகளும் பெருகும். மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சிப்காட் விரிவாக்கப் பகுதியில் 2-வது ஆலையை நிறுவ அரசு அனுமதி அளிக்கக் கூ டாது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலையையும் மூடிட வேண்டும்
ஸ்டெர்லைட் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட கடந்த 22 ஆண்டுகளில் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 1994 முதல் 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்படுகின்றன.
மூச்சுத் திணறல், தோல் நோய் , மலட்டுத்தன்மை தொடங்கி புற்றுநோய் வரை விளைவுகளை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம்.
தமிழகத்தை சுடுகாடாக்கும் இந்திய அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்
29-03-2018